எட்டு வழிச்சாலை

சரக்கு வண்டிகள் விரைந்து செல்ல
நாண்கு வழிச்சாலை எட்டு வழிச்சாலையானது.
வயலின் வார்ப்புகள் உழவன் கைவிட்டுப்போனது,
அரசுப் பள்ளியின் முகப்பு எட்டு திசையிலும் தூளானது,
காலங்காலமாகச்சொந்த வீடு வாங்காமல் சேமித்த பணத்தில்,
செந்தில் அண்ணா வாங்கிய முடித் திருத்தும் கடை முற்றிலும் நசுங்கிப்போனது,
தினமும் நாலுப்பேர் மட்டும் வாசிக்கும் நூலகம்
நாலு மைல் தூரம் உள்ளே நகர்ந்தது,
காய்கறி மண்டியின் பாதிச் சாலையின் பசிக்குச் சென்றது,
ஓய்வே அண்டாத அண்ணாச்சி மளிகைக் கடை வீழ்ந்தது,
சாலையில் குளிர்ச்சிக்கு அரணாய் வளர்ந்திருந்த புளியமரங்கள் சுவடின்றிப் போனது,
ஊர் முற்றத்திலிருந்த பூக்கடைக்கள், மருந்தகங்கள், அங்காடிகள், வெதுப்பகங்கள், உணவகங்கள்
மேல் மேம்பாலம் சென்றது,
இதே சாலையோரத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில்,
பிதுங்கிக்கொண்டு நிற்கிறது,
ஏன் என்றால் அவர் வளர்ச்சிற்கு எதிரானவர்.